திருமண நிகழ்ச்சிகளில் ஷிர்க், பித்அத் இல்லாமல், மாலை போன்றவற்றைக் கூட மாற்று மதக் கலாச்சாரம் என்று தவிர்க்கும் நாம் வீடியோ, போட்டோ போன்ற வீண் விரயங்களைச் செய்யலாமா? நபி (ஸல்) அவர்களைக் கூட அழைக்காமல் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் போன்ற நபித்தோழர்கள் திருமணம் முடித்துள்ள போது, நம் திருமண நிகழ்ச்சிகளில் குத்பா நிகழ்த்துவது சரியா? திருமணத்தில் குத்பா நிகழ்த்துவதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஏதேனும் உள்ளதா?
திருமணங்களில் வீடியோ, போட்டோ போன்ற காரியங்களைச் செய்வது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்பதைக் கடந்த இதழில் "வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்' என்ற கட்டுரையில் விளக்கியுள்ளோம். திருமணத்தை வீடியோ எடுக்கவில்லை, சொற்பொழிவுகளை மட்டும் வீடியோ எடுக்கிறோம் என்று சிலர் கூறினாலும் உண்மையில் அவர்களும் திருமண நிகழ்ச்சிகளை எடுப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றார்கள்.
எளிமையான திருமணத்தில் தான் பரக்கத் இருக்கின்றது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருக்கும் போது இந்த வீடியோ கலாச்சாரத்தை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
நபி (ஸல்) அவர்களுக்குக் கூட தெரியாமல் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் திருமணம் நடத்தியிருப்பதால் திருமண உரை நிகழ்த்துவது சரியா என்று கேட்டுள்ளீர்கள்.
குத்பா என்று சில வாசகங்களைக் குறிப்பிட்டு, இவற்றைக் கூறினால் தான் திருமணம் நிறைவேறும் என்று மக்கள் விளங்கி வைத்துள்ளனர். ஆனால் திருமணத்திற்கும் பிரசங்கத்திற்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. பிரசங்கம் எதுவும் நிகழ்த்தாவிட்டாலும் திருமணம் நிறைவேறும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
ஆனால் அதே சமயம் திருமணத்தில் உரை நிகழ்த்தப்படுவதை மார்க்கத்திற்கு முரணான செயலாகச் சித்தரிப்பதும் தவறு.
பொதுவாக அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களின் செய்தியை அடிப்படையாக வைத்து, திருமணத்திற்கு யாரையும் அழைக்கக் கூடாது, யாருக்கும் தெரியாமல் திருமணம் நடத்த வேண்டும் என்ற கருத்து ஏகத்துவவாதிகளிடம் பரவலாக உள்ளது.
திருமணத்தை நீங்கள் அறிவியுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி),
நூல்: அஹ்மத் 15545
இந்த ஹதீஸில் திருமணத்தை அறிவியுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவதே பலருக்கும் தெரியும் வகையில் திருமணம் நடத்தப் படவேண்டும் என்பதையே காட்டுகின்றது. தற்போதுள்ள நடைமுறையில் இருப்பது போல் பலரையும் அழைத்து திருமணம் நடத்துவது மார்க்க அடிப்படையில் சரியான செயல் தான் என்பதை இந்த ஹதீஸின் மூலம் அறிய முடியும். இவ்வாறு செய்வதால் அதை செலவு குறைந்த திருமணம் இல்லை என்று யாரும் கூறி விடமுடியாது. மேள தாளங்கள், மேடை அலங்காரங்கள், ஆடியோ வீடியோ கலாச்சாரம் போன்ற அனாச்சாரங்களைக் கூடாது என்று கூறலாம். ஆனால் யாரையுமே அழைக்கக் கூடாது என்று கூறுவது மார்க்க அடிப்படையில் ஏற்புடையதல்ல!